திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தொடர் அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.அதன்படி, சனி, ஞாயிறு அரசு விடுமுறையான கடந்த 2 நாட்களாக அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. எனவே, நேற்று அதிகாலையில் நடை திறக்கும் போதே, தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்பட்டது.
பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராஜகோபுரத்தையும் கடந்து, வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பிறகே சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை கடந்த 2 நாட்களாக ரத்துச் செய்யப்பட்டன. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால், இனிவரும் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பவுர்ணமி கிரிவலம் செல்ல இன்று இரவு உகந்த நேரம்
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று அதிகாலை 3.20 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 1.08 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமி கிரிவலம் செல்ல இன்று இரவு உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. ஆனாலும், நேற்று இரவில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். பவுர்ணமியை முன்னிட்டு, இன்றும், நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து வேலூர் கண்ேடான்மென்ட் வழியாக திருவண்ணாமலைக்கும், சென்னை கண்டோன்மென்ட் முதல் விழுப்புரம் வழிாக திருவண்ணாமலைக்கும் இன்றும், நாளையும் பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.