திருவள்ளூர்: திருவள்ளூரில் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு பாஜ தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜ தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜாவின் தரம் தாழ்ந்த பேச்சைக் கண்டிக்கும் வகையில் திருவள்ளூர் ரயில் நிலையம், காந்தி சிலை அருகில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.
இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. அப்போது போலீசார் தீவைத்து கொளுத்தப்பட்ட எச்.ராஜாவின் உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர். இந்த உருவ பொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஜே.ஜோஷி வரவேற்புரை ஆற்றினார். மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், வழக்கறிஞர் அஸ்வின்குமார், கோவிந்தராஜன், திவாகர் சுயம்பிரகாஷ், மாவட்ட மூத்த தலைவர்கள் தளபதி மூர்த்தி, சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவர்கள் ஜி.எம்.பழனி முகுந்தன், சதீஷ், கலை, பிரதாப், ராஜேஷ், பாலாஜி, பிரகாஷ், பசுபதி, பிரபாகரன், கும்மிடிப்பூண்டி மதன், சித்ரா, சந்தியா மற்றும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.