திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் திருப்பதி அரக்கோணம் பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை திருத்தணி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 80 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னை மாநகரப் பேருந்துகள் திருவள்ளூர் வந்து அங்கிருந்து ஆவடி பூந்தமல்லி கோயம்பேடு தி.நகர் செங்குன்றம் மந்தவெளி ஆகிய பகுதிகளுக்கு 80 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல் 50 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஊத்துக்கோட்டை பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவள்ளூருக்கு ஆயிரக் கணக்கான மக்கள் பேருந்துகளில் வருகை தருகின்றனர். அதே போல் திருவள்ளூரில் இருந்து சென்னை உள்பட பிற மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பள்ளி கல்லூரி்களுக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர். இதனால் திருவள்ளூர் நகரில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசலாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் காலை மாலை நேரங்களில் நாள்தோறும் படிக்கட்டுகளில் தொங்கியபடியே மாணவர்கள் செல்லும் நிலையும் உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து பள்ளிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் பஜார் வீதிக்கு செல்பவர்கள் வியாபாரிகள் என பெரும்பாலானோர் ஆட்டோவில் பயணிக்கின்றனர். இதனால் 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் திருவள்ளூர் நகரில் காலை முதல் இரவு வரை இயங்குவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் திருவள்ளூர் நகர மன்ற தலைவர் பாண்டியன் ஆகியோர் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வேடங்கிநல்லூர் என்ற பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என திமுக தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2023 ஜூலை மாதம் ரூ.33 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்த பேருந்து நிலையத்தில் 100 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் இயங்கும் வகையில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வணிக வளாகங்களும் கட்டப்பட்டு வருகிறது. போக்குவரத்து அலுவலகம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து நகர்மன்ற தலைவர் உதய மலர் பாண்டியனிடம் கேட்டபோது தமிழக அரசின் உத்தரவின்பேரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதனால் திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துகளும் முற்றிலும் குறையும் என்றார்.