திருவள்ளூர்: திருவள்ளூர் நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற நிகழ்ச்சியின் மூலம் ”மறுசுழற்சி மற்றும் வகுப்பறை புரட்சி” என்ற தலைப்பில் தாளாளர் ப.விஷ்ணுச்சரண் உத்தரவின் பேரில் முதன்மை செயல் அலுவலர் மோ.பரணிதரன் மேற்பார்வையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியர் சுஜாதா பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு கலந்துகொண்டு, மறுசுழற்சி மற்றும் தூய்மை பணி குறித்த கண்காட்சிகளை பார்வையிட்டு, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி மீண்டும் பயன்படுத்த இயலாத பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்களை கொண்டு அழகிய ஆடைகளை உருவாக்கி அதை அணிந்து வந்து அழகாக நின்ற மழலையர்களின் மறுசுழற்சி செய்யும் ஆர்வம், மறுசுழற்சி மற்றும் இயற்கையை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு இசைப்பாடலும் நாடகமும் சொற்பொழிவுகளும் நடைபெற்றது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மறுசுழற்சி உறுதிமொழியை மாணவி கேத்தி பிரசன்னா கூற, மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் விமலா நன்றி கூறினார்.