சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஸ் ஹவுஸ் போலீசார் மாடு வளர்க்கும் 18 உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவல்லிக்கேணியில் நேற்று முதியவர் சுந்தரத்தை சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத மாடு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி மண்டல நல அலுவலர் ஆஷா லதா அளித்த புகாரில் பேரில் சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளின் உரிமையாளர்கள் மீது ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக சாலைகளில் திரியும் மாடுகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் திரிந்த 30 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கும் விலங்குகளால் பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் திரிந்த 75 மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அடைத்தனர்.