சென்னை: திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் 5ம் படை வீடாக பிரசித்தி பெற்றது. 1960ம் ஆண்டு முதன் முதலில் வெள்ளித் தேர் செய்யப்பட்டது. 2013ம் ஆண்டு தேர் பழுதானது. 10 ஆண்டுகளாக வெள்ளித் தேர் நேர்த்திக்கடனை பக்தர்கள் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அவருடைய வழிகாட்டலின் பேரில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இதனை ஏற்று உடனடியாக டிசம்பர் 21ம் தேதி ரூ.19 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் மரத்தாலான புதிய தேர் உருவாக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை தெடர்ந்து, ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 530 கிலோ வெள்ளி கொண்டு வெள்ளித் தகடுகளாக மாற்றி தேரில் பொருத்தப்பட்டது. நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானை, முருகர் உற்சவமூர்த்தி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அமைச்சர்கள் காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று தேர் பவனியை தொடங்கி வைத்தனர். இதில், அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்
* ‘பதவியை கொடுப்பதும் எடுப்பதும் முதல்வர் உரிமை’: அண்ணாமலைக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில்
10 நாளுக்குள் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகாவிட்டால் கடும் போராட்டம் நடைபெறும் என பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே என சேகர்பாபுவிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘எங்களுக்கு பதவி கொடுக்கும், எடுக்கும் உரிமை முதல்வருக்கு மட்டுதான் உள்ளது. எந்த அடிப்படையில் அண்ணாமலை இதனை தெரிவிக்கிறார். சனாதனமும் இந்து மதமும் வாழைப்பழம் போன்றது. வாழைப்பழம் என்பது இந்து மதம் என்றால் சனாதனம் என்பது வாழைப்பழத்தின் மீது உள்ள தோலை போன்றது. தோலை நீக்கி தான் பழம் சாப்பிட இயலும். அதேபோல், சனாதானத்தில் தேவையில்லாத பகுதிகளை எதிர்ப்பது எங்களது கொள்கை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுபற்றி தெளிவாக விளக்கம் அளித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாதயாத்திரை மக்களிடம் எடுபடாமல் போன விரக்தியில் அண்ணாமலை இதுபோல ஒன்றுக்கும் உதவாத ஆயுதங்களை கையில் எடுத்துள்ளார். திமுக கற்கோட்டை. அதன் மீது கல் எரிபவர்களுக்கு தான் சேதாரம் ஏற்படும்’’ என கூறினார்.