திருத்தணி: திருத்தணி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரத்தில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திருத்தணியில் கனமழை பெய்தது.
நகரின் ம.பொ.சி சாலை, பைபாஸ் சாலை, காந்தி ரோடு, மருத்துவமனை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 10.4 செ.மீ மழை பதிவானது. இதேபோல் ஆர்.கே.பேட்டையில் 7 செ.மீ., திருவாலங்காட்டில் 5.6 செ.மீ., பள்ளிப்பட்டில் 4.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.