திருத்தணி: திருத்தனி அருகே மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி ஆர்கே பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் சாராயம் மற்றும் டாஸ்மாக் மது பாட்டில்கள் கடத்தி பதுக்கி வைத்து விற்பனை செய்யும் சம்பவங்களை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருத்தணி அருகே தரணிவராகபுரம் கிராமத்தில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மது வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி வாணி(51) என்பவர் அவரது வீட்டின் அருகில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து வாணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.