Tuesday, June 24, 2025
Home ஆன்மிகம்ஆலய தரிசனம் துயர் தீர்ப்பார் திருத்தளிநாதர்

துயர் தீர்ப்பார் திருத்தளிநாதர்

by Nithya

ஒரு கோயிலின் பெயரையே தமது திருப்பெயராக ஈசன் ஏற்றுக்கொண்ட பெருமை கொண்ட தலம்தான் திருத்தளி. ‘தளி’என்றால் கோயில், ‘நாதர்’ என்றால் இறைவன் என்று பொருள்படும். சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளி கௌரி தாண்டவம் ஆடி, அம்பிகைக்கு அருள்புரிந்த இத்தலத்தின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம்.ஈசன் தேவியுடன் தனிமையில் இருந்த தருணத்தில் விளையாட்டாக அம்பிகையின் கரிய நிறத்தை சுட்டிக்காட்டி ‘காளி’ என்று விமர்சித்தார்.

அதனால் பொய்க்கோபம் கொண்ட அன்னை தனது கருநிறத்தை நீக்கி, வெண்ணிறம் பெற்றாள். தேவியின் அந்த எழில் வடிவமே கௌரி என்று பெயர் பெற்றது. ஒரு பௌர்ணமி நன்நாளில் அந்தி வேளையில் கௌரி தேவி ஈசனிடம், ‘ரம்யமான இந்தச் சூழலில் தாங்கள் திரிபுர சம்ஹாரத்தின் போது ஆடிய தாண்டவத்தை ஆடிக்காட்டுங்கள்’ என வேண்டுகோள் விடுத்தாள். அதற்கு ஈசன், தான் பூலோகத்தில் திருப்பத்தூரில் எழுந்தருளுவதாகவும், அங்கே அவள் விரும்பியபடி திரிபுரசம்ஹார தாண்டவத்தை ஆடிக் காட்டுவதாகவும் வாக்களித்தார். அதனால் மனம் மகிழ்ந்த கௌரி நந்திதேவருடன் திருப்பத்தூர் வந்தடைந்தாள். இத்தலத்தில் நந்தி மத்தளம் வாசிக்க, தேவி மனம் மகிழுமாறு ஈசன் திரிபுரசம்ஹாரத் தாண்டவத்தை ஆடிக் காட்டினார். கௌரி மனம் மகிழ்ந்ததால் இத்தாண்டவம் கௌரி தாண்டவமாயிற்று.

அதே சமயம் வைகுண்டத்தில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமன் திடீரென எழுந்து பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்தார். அதைக் கண்ட மகாலட்சுமி, ‘ஐயனே தங்களது திடீர் மகிழ்ச்சிக்கான காரணத்தை நான் அறியலாமா?’ என்று கேட்க, அதற்கு திருமால், ‘கௌரியின் விருப்பத்தை நிறைவேற்ற ஈசன் கௌரி தாண்டவம் ஆடிய அழகை நான் மானசீகமாக தரிசித்தேன். உலகை உய்விக்கும் உன்னதத் தாண்டவம் அது. அத்தாண்டவத்தை தரிசித்த கௌரி பேறு பெற்றவள்’ என்று கூறினார். அதற்கு திருமகள், ‘பரந்தாமா! அந்த தாண்டவத்தை நானும் தரிசிக்க ஆவலாய் உள்ளேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டாள். ‘தேவி, நீ திருப்பத்தூர் திருத்தலம் சென்று ஐயனை வேண்டித் தவம் புரிந்தால், நீயும் அந்த தாண்டவத்தை தரிசிக்கும் பாக்யம் பெறுவாய்’ என்றார் திருமால்.

பெருமாளின் அறிவுரையின்படி திருமகள் திருப்பத்தூர் வந்தடைந்தாள். காரையூர் என்னுமிடத்தில் திருத்தளிநாதரை எண்ணி முந்நூறு ஆண்டுகள் தவம் இருந்தாள். ஈசன் அசரீரியாக தோன்றி தேவியிடம் சுயம்புலிங்கத்தை தரிசிக்க சொன்னார். தேவியும் ஈசனை வணங்க திருப்பத்தூரில் உள்ள தளி தீர்த்தத்தின் தென்கரையில் கௌரீசனை வழிபட்டாள். அவளுடைய பக்திப்பூர்வமான வழிபாட்டில் மனம் மகிழ்ந்த ஈசன், திருமகளுக்கும் கௌரி தாண்டவம் ஆடி அருளினார்.

புராதனச் சிறப்புகள் நிறைந்த இத்தலத்தின் ராஜகோபுரம் எழிலுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வடப்பக்கம் அம்பாள் சந்நதிக்குச் செல்ல தனியாக ஒரு கோபுர வாயில்
உள்ளது. வெளிப் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் அன்னை சிவகாமசுந்தரி கிழக்கு நோக்கி தனி சந்நதியில் வீற்றிருக்கிறாள். அம்பாள் கோட்டத்தின் சுவரே ஆலயத்தின் வடக்கு மதிலாக அமைந்திருப்பது விசேஷம். இதற்கு வடமேற்கில்தான் ஸ்ரீதளி தீர்த்தம் இருக்கிறது.

நடுப் பிராகாரத்தில் பலிபீடமும், தெற்கு பகுதியில் வள்ளி- தெய்வானை சமேத முருகன், வடக்குப் பிராகாரத்தில், அழகிய கருவறை விமானத்துடன் யோக பைரவர் அருள்புரிகிறார்கள்.
உள்பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி அமைந்துள்ள நடராஜர் சந்நதிதான் கௌரி தாண்டவம் சந்நதி. கல்லினால் வடிவமைக்கப்பட்ட கருவறை விமானம் மூன்று நிலைகள் கொண்டது. விமானத்தின் தெற்கில் கீழே தட்சிணாமூர்த்தியும், மேலே யோக தட்சிணாமூர்த்தியும் மேற்குப்புறம் யோக நரசிம்மரும், வைகுண்டநாதரும், வடக்கே பிரம்மாவும் வீற்றிருக்கின்றனர். சந்நதியில் சுயம்பு மூர்த்தமாக ஐயன் திருத்தளிநாதர் தரிசனம் தருகிறார்.

புராணச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் மிக்க இந்த திருத்தலத்திற்கு அப்பர் சுவாமிகளும், ஞானசம்பந்தரும் வருகை புரிந்து பதிகம் பாடியிருக்கிறார்கள். இங்குள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடி நெகிழ்ந்திருக்கிறார். கௌரி தாண்டவம் ஆடிய கௌரீசனை வணங்குவோருக்கு வேண்டியன அருள்பாலிக்கிறார். மதுரையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது திருத்தளி. காரைக்குடி ரயில் நிலையத்தில் இறங்கியும் செல்லலாம்.

தொகுப்பு: மகி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi