*பற்ற வைக்க முயன்றதால் பரபரப்பு
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, மேலாளரை கட்டிப் பிடித்து பற்ற வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியைச் சேர்ந்தவர் பழனிக்குமார்(52).
இவர் திருப்புத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தான் வழக்கமாக ஓட்டும் பஸ்சில், சில செலவுகள் செய்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த பஸ்சை மாற்று டிரைவராக பாலாஜி என்பவரை, ஓட்டிச் செல்ல நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக பணிமனை மேலாளர் தனபால் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழனிக்குமார், ‘‘பாலாஜி ஓட்டிச் சென்ற பஸ்சில் பிரேக் பிடிக்காததால் அதை ஓட்டுவது சிரமமாக இருக்கும்.
எனவே, அதை சரி செய்து எடுத்து செல்லுங்கள். இல்லையென்றால் இதே பஸ்சை நானே சென்னைக்கு ஓட்டி செல்கிறேன்’’ எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு மேலாளர் தனபால் மறுத்து விட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த பழனிக்குமார், பஸ்சில் இருந்து முகப்பு விளக்கு, பிரேக் கம்பி மேலுள்ள கொண்டை ஆகியவற்றை நேற்று முன்தினம் கழற்றி சென்றதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து மேலாளர் தனபால், மேலதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். நேற்று காலை பணிமனைக்கு வந்த பழனிக்குமார், பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு, அருகில் இருந்த மேலாளர் தனபால் மீதும் ஊற்றி அவரை அணைத்து பிடித்து பற்ற வைக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, அருகில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வண்ணம் இருவரையும் காப்பாற்றியதாக தெரிகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேலாளர் தனபால் அளித்த புகாரில், பழனிக்குமார் மற்றும் அவருடன் வந்த 2 பேர் மீது வழக்கு பதிந்து, திருப்புத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பின்னர் போலீசார், பழனிக்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.