திருப்பூர்: திருப்பூரில் பாலியல் புரோக்கர் கடத்தல் வழக்கில் கைதான 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியைச் 28 வயது வாலிபர், திருப்பூர் கோவில் வழி, பொன் கோவில் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியை வைத்து பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து திருப்பூர் மற்றும் பிற பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டபோது 3 பேர் போலீசார் உடையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பவித்ரனின் செல்போனை பிடுங்கி, ரூ.1 லட்சம் கேட்டு பவித்ரனை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து பவித்ரனின் மனைவி நல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், பெருமாநல்லூரில் ஒரு தனியார் விடுதியில் இருந்த பவித்ரனை போலீசார் மீட்டனர். அங்கிருந்த பாலியல் புரோக்கர்கள் மற்றும் போலீஸ்காரர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் ஒரு வாலிபரை மிரட்டி புரோக்கர்கள் ரூ.60 ஆயிரம் பறித்து உள்ளனர். இந்த புரோக்கர்களில் பவித்ரனும் ஒருவர். இதனால் இந்த விவகாரத்தில் அவர்களிடமிருந்து பணத்தை பெறுவதற்காக தனது போலீஸ் நண்பர்களுடன் அந்த வாலிபர் பவித்ரன் உள்ளிட்ட புரோக்கர்களை கடத்தியது தெரிந்தது.
இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் சோமசுந்தரம் (31), கோபால்ராஜ் (33), நீலகிரி மாவட்டம் தேவாலா சோலூர் மட்டத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் லட்சுமணன் (32), இவர்களின் நண்பர்களான சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த ஜெயராம் (20), ஹரீஸ் (25), அருண்குமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் போலீஸ்காரர்கள் 3 பேரும் 2011ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர்கள். இந்த நிலையில் போலீஸ்காரர்கள் 3 பேரையும் திருப்பூர், நீலகிரி மாவட்ட எஸ்பிக்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.