காங்கயம்: கொலை, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்த சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி, திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே ரூ.1 கோடியில் சொகுசு பங்களா கட்டி வருவது தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ளது கொடுவாய். இங்குள்ள சாய்ராம் நகரில் சந்தேகப்படும்படியாக ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொகுசு வீடு கட்டி வந்தார். இதுகுறித்து காங்கயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
பிடிபட்ட நபர் சென்னை வியாசர்பாடி, கரிமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்கிற ஜனார்த்தன் (40) என்பதும், போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளியாகவும், தற்போது வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சூச்சி சுரேஷ் என்பவரின் வலது கரமாகவும் செயல்பட்டு வருபவர் என தெரியவந்தது.இவர் மீது கொடுங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு வீசுதல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜனா, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாமீனில் வந்து தலைமறைவு ஆனார். அவரை போலீசார் தேடிவந்த நிலையில்தான் அவர் திருப்பூர் அருகே ெகாடுவாயில் வீடு கட்டி வருவது தெரிய வந்தது.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க சென்னையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடுவாய் பகுதியில் தலைமறைவாக இருந்து இப்பகுதியில் இடம் வாங்கி ரூ.1 கோடியில் சொகுசு பங்களா கட்டி வந்தார். திருப்பூரில் தங்கியிருந்து தினமும் கொடுவாய் வந்து கட்டுமான பணியை பார்வையிட்டு வந்துள்ளார். விரைவில் புதிய பங்களாவில் குடியேற முடிவு செய்திருந்த நிலையில் போலீசாரின் சந்தேகப் பார்வையில் சிக்கி கைதாகியுள்ளார். ரவுடி ஜனாவை ஊதியூர் போலீசார் கைது செய்து சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.