Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பூரில் ரோட்டோரத்தில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்

*கலெக்டரிடம், செல்போன் விற்பனையாளர்கள் மனு

திருப்பூர் : ரோட்டோர சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜிடம், திருப்பூர் மாவட்ட செல்போன் ரீடைலர்ஸ் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மனு கொடுத்தனர்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது திருப்பூர் மாவட்ட செல்போன் ரீடைலர்ஸ் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் சங்க தலைவர் சேக்ஹோலி, செயலாளர் லிங்கசாமி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரோட்டோரங்களில் அனுமதி இன்றி குடை போட்டு சிம்கார்டு விற்பனை செய்வதாலும், நேரடியாக வீடுகளுக்கு சென்று சிம்கார்டு விற்பனை செய்வதினாலும் பொதுமக்கள் உடைமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பு இன்றி இருக்கிறார்கள். அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும், போலீசாருக்கும் தீவிரவாத அச்சுறுத்தலும் பல சைபர் கிரைம் குற்றங்களையும், சட்டம் ஒழுங்கு சீர் குலைவதற்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமே. முறைகேடாக இந்த ரோட்டோரங்களில் குடை போட்டு சிம்கார்டு விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் டிஸ்ட்ரிபூட்டர்களும் சேர்ந்து கடந்த கால பாதிப்புகளை ஏற்படுத்தியதற்கு காரணமாக உள்ளார்கள். எனவே ரோட்டோர சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

தாராபுரம் ரெட்டவலசு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தாராபுரம், ரெட்டவலசு கிராமத்தில் 500 குடும்பங்களை சேர்ந்த 1500 பேர் வசித்து வருகிறோம். எங்களது பகுதியில் தார்ச்சாலை வசதி இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வந்து கொண்டிருக்கிறோம். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியுள்ளனர்.

இதையடுத்து, பல்லடம் இலங்கை மறுவாழ்வு முகாமினை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், இலங்கை மறுவாழ்வு முகாமில் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இங்கு 44 வீடுகள் கட்டுவதற்கு வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால் அதனை வேறு இடத்தில் கட்டுவதாக கூறி வருகின்றனர். எங்களுக்கு இந்த பகுதியை விட்டு வேறு பகுதிக்கு செல்ல விருப்பம் இல்லை. எனவே எங்களுக்கு இந்த பகுதியிலேயே வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த மனுவில், பல்லடம் பொங்குபாளையத்தை சேர்ந்த காளியாதேவி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் பொறுப்பில் சமூகப்பணி செய்து வந்தார். இந்நிலையில் காளியாதேவி கடந்த மாதம் 14-ம் தேதி விபத்தில் மரணமடைந்தார். இது விபத்து இல்லை. திட்டமிடப்பட்டு காளியாதேவி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். மேலும், இதில் தொடர்புடையவர்கள் மீது எஸ்.சி. எஸ்.டி. பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.