திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த பணிக்கான பில் தொகைக்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.திருப்பூர் மாநகராட்சியில் சிவகங்கையை சேர்ந்த கந்தசாமி ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் ரூ.1 கோடியே 59 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ளார்.
பணியை முடித்ததும் பொறியாளர் குழுவினர் பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து கந்தசாமி சாலைப்பணிக்கான பில் தொகைக்கு ஒப்புதல் வழங்க திருப்பூர் ராயபுரத்தில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி சுரேஷ்குமார் (39) என்பவரை அணுகினார்.
அப்போது பில் தொகைக்கு ஒப்புதல் வழங்க ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று சுரேஷ்குமார் லஞ்சம் கேட்டார். முதல்கட்டமாக கந்தசாமி ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். மீதம் ரூ.1 லட்சத்தை தர வேண்டும் என்று சுரேஷ்குமார் கேட்டுள்ளார். இதை கொடுக்க விரும்பாத கந்தசாமி இது குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். கைதான சுரேஷ்குமார் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக உத்தரவை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் பிறப்பித்தார்.