திருப்பூர்: திருப்பூரில் நேற்று அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி 3 பேர் கொண்ட கும்பலால் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருப்பூர் குமரானந்தபுரம் காமராஜர் வீதியை சேர்ந்தவர் பைனான்சியர் பாலமுருகன் (30). திருப்பூர் இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர். இவரது மனைவி ஹேமாமாலனி (25). இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமணத்தம்பதி பாலமுருகனின் பெற்றோர் வீட்டில் வசித்தனர்.
பாலமுருகனுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு செல்போன் அழைப்பு வந்தது. இதைத்தொடர்ந்து, பாலமுருகன் வீட்டிலிருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை நேற்று அதிகாலையில் தேடிச்சென்றனர். அப்போது அவர் வீட்டின் அருகே வெட்டுக்காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைப்பார்த்த பெற்றோர், மனைவி ஆகியோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் பிரவீன் கவுதம், உதவி கமிஷனர் வசந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பாலமுருகனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சி மற்றும் விசாரணை அடிப்படையில் அதிகாலை 4 மணிக்கு 3 பேர் கொண்ட கும்பல் பாலமுருகனின் வீட்டருகே அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். பாலமுருகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்ததும் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ‘‘கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். கைது செய்ததால் உடலை பெற்றுக்கொள்வோம்’’ எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தி கலைத்தனர்.
* இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி உள்பட 2 பேர் கைது?
இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் கொலை தொடர்பாக புதிய பஸ் நிலையம் பி.என். ரோட்டை சேர்ந்த சேர்ந்த சுமன் (34), தமிழரன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளதாக கூறப்படுகிறது. கொலையான பாலமுருகன் வகித்த திருப்பூர் இந்து முன்னணி செயற்குழு உறுப்பினராக ஏற்கனவே சுமன் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது. அதன்பின்னர் சுமன் இந்து முன்னணியியில் இருந்து விலகி ஐஜேகே கட்சியில் சேர்ந்தார்.
இருந்தபோதும் பதவி போட்டியில் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில்தான் பாலமுருகனை, சுமன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக்கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக நரசிம்ம பிரவீன் (29), அஸ்வின் (29) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.