திருப்போரூர்: திருப்போரூர் – செங்கல்பட்டு சாலையில் இரவு நேரங்களில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு வரை நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, வட மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம் வழியாக செல்லாமல் செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் வந்து, ஓஎம்ஆர் சாலை மற்றும் இசிஆர் சாலை வழியாக பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றன.
இதனால்தான் இருவழிப்பாதை அண்மையில் நான்கு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த சாலையில் கொட்டமேடு கிராமத்தில் இருந்து திருப்போரூர் வரையும், செங்கல்பட்டு அருகே வல்லம் சந்திப்பு பகுதியில் இருந்து திருவடிசூலம் வரையும் வனப்பகுதி உள்ளது. செங்கல்பட்டில் உள்ள நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், ரயில் நிலையம் ஆகியவற்றுக்குச் செல்லும் பலரும் பைக்குகளில் 24 மணி நேரமும் இச்சாலையில் பயணிக்கின்றனர்.
இதில், மாலை 6 மணிக்கு மேல் தம்பதியாகவும், தனியாகவும் செல்லும் வாகன ஓட்டிகளிடம் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அத்து மீறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் கொட்டமேடு சந்திப்பில் தனியாகவோ, ஜோடியாகவோ செல்லும்போது மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுச் செல்வதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
மர்ம நபர்களின் இந்த விபரீத செயலால் வாகன ஓட்டிகளிடம் பெரும் அச்சம் எழுந்துள்ளது. இந்த செயலில் ஈடுபடும் மர்ம நபர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணிந்து செல்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர். பல்வேறு சம்பவங்கள் நடந்திருந்தாலும் ஓரிரு பெண்கள் மட்டுமே காவல் நிலையம் வந்து புகார் தெரிவித்துச் சென்றுள்ளனர். ஆகவே, செங்கல்பட்டு செல்லும் சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.