திருப்போரூர்: திருப்போரூர் – கூடுவாஞ்சேரி இடையே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலை 29 கி.மீ. தூரம் உள்ளது. இச்சாலையில் இள்ளலூர், காட்டூர், அம்மாப்பேட்டை, நெல்லிக்குப்பம், கல்வாய், குமிழி, பாண்டூர், காயரம்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. ஓ.எம்.ஆர். சாலையையும், ஜி.எஸ்.டி. சாலையையும் இணைக்கும் இந்த சாலையை பல்வேறு கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரியில் இருந்து மாமல்லபுரம் செல்வோரும், திருப்போரூர், கேளம்பாக்கம் செல்வோரும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கிராமப்புறங்களாக இருந்த பகுதிகள் முழுவதும் விவசாயம் கைவிடப்பட்டு வீட்டு மனைகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாற்றம் பெற்று வருகின்றன. விவசாயம் பெரும்பாலும் கைவிடப்பட்டு விட்டதால் விவசாயிகள் வளர்த்து வந்த மாடுகள் ஆங்காங்கே சுற்றித் திரிகின்றன.
அவற்றின் உரிமையாளர்கள் பால் கறக்கும்போது மட்டும் பயன்படுத்தி விட்டு, மாடுகளை மீண்டும் வீதிகளில் விட்டு விடுகின்றனர்.
இதன் காரணமாக இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்து உறங்குகின்றன. இதனால் சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், இந்த மாடுகளின் மீது மோதி பலத்த விபத்துகளை சந்திக்கின்றனர். மாடுகளை சாலைகளில் திரிய விடக்கூடாது, அவற்றை உரிமையாளர்களே பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், உள்ளாட்சி நிர்வாகங்கள் இதை கண்காணித்து சாலையில் விடப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்கள், மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை கண்டு கொள்வதில்லை. இதனால் விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.