திருப்போரூர்: திருப்போரூர் பேருந்து நிலையத்தில் பழுதான நாற்காலிகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய நாற்காலி கள் அமைக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம், தாம்பரம், கோயம்பேடு, உயர்நீதிமன்றம், தி.நகர், அடை யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும், நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருப்போரூர், ஆலத்தூர், தண்டலம், செம்பாக்கம், மடையத்தூர், சிறுதாவூர், ஆமூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல திருப்போரூர் பேருந்து நிலையத்தில் காத்திருக்கவேண்டிய நிலையுள்ளது.
பயணிகளுக்காக பேருந்து நிலையத்தில் காத்திருப்பு கூடம், நாற்காலிகள் உள்ளன. நீண்டநாட்களாக நாற்காலிகளின் கைப்பிடிகள், இருக்கைகள் உடைந்துகிடக்கின்றன. சிலவற்றில் நாற்காலிகளே இல்லாமல் வெறும் இரும்பு குழாய்கள் மட்டுமே உள்ளன. இதனால் திருப்போரூர் பேருந்து நிலையத்திற்கு குழந்தைகள் மற்றும் பைகளுடன் வரும் பயணிகள் உட்கார முடியாமல் நிற்கவேண்டிய நிலையுள்ளது. மேலும் காத்திருப்பு கூடத்தில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள் காத்திருப்பு கூடத்திற்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தை பராமரித்து வரும் திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் காத்திருப்பு கூடத்தில் சேதமடைந்து காணப்படும் நாற்காலிகளை அகற்றிவிட்டு புதியது அமைக்கவேண்டும். பேருந்து நிலைய வளாகத்தில் மது அருந்தும் சமூக விரோதிகள் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்து பாதுகாக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.