திருப்போரூர்: திருப்போரூர் கிரிவலப்பாதையில் தனியாருக்கு சொந்தமான பேக்கரி உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று காலை 6 மணி முதலே தொழிலாளர்கள் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று பகல் 11 மணி அளவில் சமையலறையில் ஒரு பகுதியில் திடீரென தீ பிடித்தது.
இதையொட்டி இருந்த விறகுகுவியல் மற்றும் மளிகைப் பொருட்கள் இருந்த பகுதியிலும் தீ பரவியது. உடனே தொழிலாளர்களும், அருகில் இருந்தவர்களும் சேர்ந்து தீயை அணைத்தனர். சிறிய அளவில் மட்டுமே தீ ஏற்பட்டதால் பெரிய ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இதனால், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.