சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பல ஆண்டுக்கால காத்திருப்புக்கு பிறகு தங்கள் கிராமத்திற்கு அரசு பேருந்து வசதி தொடங்கப்பட்டதை ஊர் மக்கள் கொண்டாடினர். சிவகங்கை மாவட்டம் கருங்குளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு இதற்கு முன்பு பேருந்து வசதி இல்லாததால் காரைக்குடிக்கு செல்ல வேண்டும் என்றால் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பட்டமங்கலம் கிராமத்திற்கு நடந்து சென்று பேருந்து ஏற வேண்டிய நிலை இருந்தது. இதனால் தினசரி பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பொன்னுசாமியிடம் ஊர் மக்கள் கூறியுள்ளனர். அவர் விசிக தலைவர் திருமவளவனிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து கருங்குளம் கிராமத்திற்கு பேருந்து வசதி அமைத்து தர போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை திருமாவளவன் வலியுறுத்தினார். அதன்படி அங்கு தற்போது அரசு பேருந்து வசதி அமைத்து தரப்பட்டுள்ளது.
தங்கள் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை சந்தனம் வைத்து ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனர். ஏற்கனவே காரைக்குடியில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு செல்லும் பேருந்து இனி கருங்குளம் கிராமம் வழியாக வந்து நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் ஊர் மக்கள் ஏறி உற்சாகமாக பயணம் செய்தனர்.