திருப்பத்தூர்: திருப்பத்தூரில் காதல் விவகாரத்தில் 19 வயதான இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரை அடுத்த அனுமந் உபசாகர் தெரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இந்த சிறுமியை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சுகேஷ் என்ற வாலிபர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதேநிலையில் அனுமந்த் உபசாகர் தெருவை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் கார்த்திக், அச்சிறுமியை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் அனுமந்த் உபசாகர் பேட்டை பகுதியில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு சுகேஷ் என்ற வாலிபர் நேரடியாக சென்று, தானும் அச்சிறுமியும் காதலித்து வருவதாக கூறியுள்ளார். தான் காதலிக்கும் பெண்ணை மற்றொரு இளைஞரும் காதலிப்பதாக கூறியதால் ஆத்திரத்தில் இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர். தொடர்ந்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் கார்த்தி, கார்த்தியின் தந்தை, கூட்டாளியான பாலாஜி, தருமன், முத்து ஆகிய ஐவரும் சேர்ந்து சுகேஷின் பின்பக்க தலையில் கட்டையை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த சுகேஷ் 5 நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் இன்று பிற்பகல் 12 மணியளவில் சுகேஷ் உயிரிழந்தார். காதல் விவகாரத்தில் இளைஞரை கொலை செய்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுகேஷ் மற்றும் கார்த்தி ஆகியோர் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க இருவீட்டாரின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.