*கலெக்டர் வெளியிட்டார்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இக்கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்து வாக்குச்சாவடிகளின் பட்டியலினை வெளியிடுமாறு தெரிவித்திருந்தது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத்தொகுதிகளில் உள்ள 1038 வாக்குச்சாவடிகளை தலைமைத்தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச்செயலர் அறிவுரையின்படி அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தணிக்கை செய்துள்ளனர்.அதில், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் உட்பட 1038 புதிய வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு தற்போது உள்ள 1038 வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அரசியல் கட்சிகள், பொது மக்கள் எவருக்கேனும் மேற்படி பொருள் குறித்து ஏதேனும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருப்பின் தங்களது எழுத்து பூர்வமான கோரிக்கை, ஆட்சேபனை மனுக்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர்களுக்கு வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
பட்டியல் விளம்பரப்படுத்தப்படும்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்தாய்வு கூட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 1500 மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் ஏதும் இல்லை, மேலும் வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் அலுவலகங்களிலும் விளம்பரப்படுத்தப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.