திருமலை: திருப்பதி அருகே தீபாவளி பண்டிகையொட்டி 2 லட்சம் பட்டாசுகளால் உருவாக்கிய 20 அடி உயர நரகாசுரன் உருவம் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் தும்மலகுண்டா கிராமத்தில் தீபாவளி பண்டிகை நரக சதுர்த்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ‘நரகாசுர வதம்’ நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. இதையொட்டி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் எதிரே 2 லட்சம் பட்டாசுகளால் 20 அடி உயரத்தில் நரகாசுரன் உருவம் அமைக்கப்பட்டது.
சந்திரகிரி தொகுதி எம்எல்ஏவும், அரசு கொறடாவுமான பாஸ்கர் ரெட்டி, திருப்பதி புறநகர் மேம்பாட்டு ஆணைய தலைவர் மோகீத் ரெட்டி ஆகியோர் தலைமையில் விழா நடந்தது. இதில் பட்டாசுகளால் அமைக்கப்பட்ட நரகாசுரன் உருவத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. அந்த பட்டாசுகள் சுமார் 1 மணி நேரம் வெடித்து சிதறி வாணவேடிக்கை போன்று காணப்பட்டது. இதனை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்த ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். பலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.