திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் செய்தது உண்மை தான் என புலனாய்வு குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நெய் சப்ளை செய்த அபூர்வா சாவ்லா, ஜெயின், விபின் ஜெயின் மற்றும் போமில் ஜெயின் ஆகிய 4 பேரை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் குழு கைது செய்து சிறையில் அடைத்தது.
பின்னர் நீதிமன்றத்தில் 4 பேரிடமும் விசாரிக்க அனுமதி பெற்று, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அலிபிரியில் உள்ள விசாரணை குழு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு 5 நாட்கள் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு மீண்டும் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விசாரணையில், குற்றவாளி அபூர்வா சாவ்லா என்பவர் ரசாயன பொறியியல் படித்துள்ளதாகவும் நெய்யில் ரசாயனங்கள் கலந்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் ரசாயனங்கள் எங்கிருந்து பெறப்பட்டன? எவ்வளவு பயன்படுத்தப்பட்டன? யார் இதில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.