திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா தலைமையில் டயல் யுவர் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது செயல் அதிகாரி தர்மா பேசியதாவது: வருடாந்திர பிரமோற்சவம் சிறப்பாக நடத்தப்பட்ட நிலையில் அக்டோபர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் 14ம் தேதி அங்குரார்பண பூஜை நடைபெறும். 19ம் தேதி கருடசேவை, 20ம் தேதி புஷ்பகவிமானம், 22ம் தேதி தங்கரதம், 23ம் தேதி சக்ரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறும்.
தினந்தோறும் காலை 8 முதல் 10 மணி வரையும், இரவு 7 முதல் 9 மணி வரை வாகனசேவை நடைபெறும். இதில் கொடியேற்றமும், கொடி இறக்கமும் இருக்காது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தைகளுடன் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 19ம் தேதி கருடசேவை அன்று, மலைப்பாதை சாலையில் இரு சக்கர வாகன போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பக்தர்கள் திரண்டனர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 72,104 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.25,044 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.80 கோடி காணிக்கை செலுத்தினர். புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமையான இன்று காலை சுமார் 7 மணி நிலவரப்படி பக்தர்கள் வைகுண்டம் அறையில் காத்திருக்காமல் நேரடியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர் சுமார் 8 மணிக்கு மேல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டு 6 மணிநேரத்திற்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்களும் நேரடியாக சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.