திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு பிரசாதங்கள் தயாரிக்க பாரம்பரிய இன மாடுகளில் இருந்து கரு பரிமாற்ற திட்டம் வெற்றியடைந்துள்ளதாக ஆந்திர முதன்மை செயலாளர் தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நிவேதனம் செய்யப்படுகிறது. இதற்கென கோசாலையில் பாரம்பரிய இனமாடுகள் வளர்க்கப்பட்டு அதன்மூலம் பெறப்படும் பாலில் இருந்து நைவேத்தியம், பிரசாத பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தேசிய அளவில் பாரம்பரிய இன பசுக்களை கூடுதலாக இனவிருத்தி செய்ய தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநில முதன்மை செயலாளர் ஜவகர்ரெட்டி நேற்று திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உள்நாட்டு தேசிய மாடுகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன் திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதன் ஒரு பகுதியாக வட இந்தியாவில் இருந்து சாஹிவால், கான்கிரீஸ், கிர் போன்ற பாரம்பரிய இன மாடுகளை வரவழைத்து சிறப்பு தொழில்நுட்பத்துடன் கரு பரிமாற்றம் செய்து நாட்டு மாடுகளின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த தொழில்நுட்பத்தில் 90 சதவீத பெண் கன்றுகள் பிறக்கின்றன. தற்போது பிறந்துள்ள 6 கன்றுகளில் ஒன்று மட்டும்தான் ஆண் கன்று. அவ்வாறு வாடகை தாய் பசு மூலம் கருத்தரிக்கப்பட்ட மேலும் 13 பசுக்கள் விரைவில் கன்றுகளை பிரசவிக்க உள்ளது. நாட்டு மாடுகளில் இருந்து பெறப்படும் பால் மூலம் ஏழுமலையானுக்கு கைங்கர்யங்கள் மற்றும் பிரசாதங்கள் தயாரிக்கப்பட உள்ளது. இதனை கருத்தில்கொண்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏழுமலையான் அருளால் இந்த சோதனை திட்டம் வெற்றியடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது தேவஸ்தான அதிகாரிகள் உடனிருந்தனர்.