திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மலைப்பாதையில் நடைபாதையாக செல்கின்றனர். இவ்வாறு சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கவ்வி சென்று கொன்றது. இதையடுத்து தேவஸ்தானம், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த கூண்டில் இதுவரை 3 சிறுத்தைகள் பிடிபட்டது. மேலும் நடைபாதையில் அவ்வப்போது கரடி நடமாட்டமும் உள்ளது. இந்நிலையில், நடைபாதை அருகே வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் தேடி ஒரு கரடி குட்டி நேற்று அதிகாலை வந்துள்ளது. இதனைப் பார்த்த அவ்வழியாக பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.