திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஏ.ஆர்.டெய்ரி நிர்வாக இயக்குனர் ராஜு ராஜசேகரன், போலே பாபா டெய்ரி இயக்குநர்கள் போமில் ஜெயின், விபின் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா வினயகாந்த் சாவடா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனர். அவற்றின் மீது நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது. இதில் சி.ஐ.டி. போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், தேவஸ்தானத்திற்கு கலப்படம் செய்யப்பட்ட நெய்யை சப்ளை செய்ததில் போலே பாபா டெய்ரி முக்கிய பங்கு வகித்துள்ளது.
நெய் உற்பத்திக்கு போலே பாபா டெய்ரி பால் சேகரிக்கவில்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர். பாமாயில், ரசாயனங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி கலப்பட நெய் தயாரிக்கப்பட்டதாக சிறப்பு விசாரணைக் குழு தனது விசாரணையில் கண்டறியப்பட்டது. முன்பே தயாரிக்கப்பட்ட திட்டத்தின் படி கலப்பட நெய் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்தனர். நெய் வழங்குவதற்காக ஏஆர் டெய்ரி தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தாலும், முழு மோசடி பின்னணியிலும் போலே பாபா டெய்ரி இருக்கிறது. தேவஸ்தானத்தில் போலே பாபா டெய்ரி நிறுவனம் பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளதால் ஏஆர் டெய்ரி மற்றும் வைஷ்ணவி டெய்ரி ஆகியவை கொண்டு போலே பாபா டெய்ரி நிறுவனம் கலப்பட நெய்யை வழங்கினர் என்றார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.