மதுரை: திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்த நெய்யில் கலப்படம் இருப்பதாக எழுந்த புகாரில், நிறுத்தி வைத்து ஒன்றிய உணவு பாதுகாப்பு ஆணைய அலுவலர் பிப். 14ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன நிர்வாகி ராஜதர்ஷினி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘நெய் விநியோகத்தில் தான் பிரச்னை. எங்கள் நிறுவனம் பால்கோவா, வெண்ணெய், தயிர் உள்ளிட்ட பல்வேறு பால் பொருட்களை உற்பத்தி செய்கிறோம். இப்பொருட்களில் எந்த பிரச்னையும் இல்லை. அப்படியிருக்கும்போது மொத்த வர்த்தகத்தையும் நிறுத்துவது சட்டவிரோதம். எங்கள் நிறுவனத்தில் 400 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெருமளவு கடன் பெற்றுள்ளோம்.
எனவே, நெய் தவிர்த்து பிறகு பொருட்கள் வர்த்தகத்துக்கான உரிமத்தை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், ‘‘ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனம் நெய் தயாரிக்க வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த உணவு பாதுகாப்பு அலுவலரின் உத்தரவு தொடர்கிறது. அதே நேரத்தில் பால் பதப்படுத்துதல், விற்பனை செய்வதை தொடரலாம். இந்த மனுவிற்கு ஒன்றிய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய அதிகாரி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.