திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் சப்ளை செய்த 3 பேருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குறைந்த விலையில் நெய் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது. இதனை டெண்டர் எடுத்த பல்வேறு நிறுவனங்கள் டால்டா, பாமாயிலில் ரசாயனம் கலந்து நெய் என்ற பெயரில் விநியோகம் செய்தனர். இதில் பிரசாதங்களை தயார் செய்து சுவாமிக்கு படைத்து, பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த கலப்பட நெய் குறித்து உண்மை கண்டறியப்பட்டு வழக்கு பதிந்து முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், சிறப்பு விசாரணை அதிகாரிகள் கலப்பட நெய் குறித்த விசாரணை அறிக்கையை சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்நிலையில் நேற்று ஆந்திர உயர் நீதிமன்றம் கலப்பட நெய் சப்ளை செய்த போலே பாபா டெய்ரி நிறுவனத்தின் இயக்குநர்கள் போமில், விபின் மற்றும் வைஷ்ணவி டெய்ரி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி வினய் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும் சிறப்பு விசாரணை அதிகாரிகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.