திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 4ம்தேதி தொடங்கி 12ம்தேதி வரை நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 4ம்தேதி தொடங்குகிறது. 12ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி அக்டோபர் 3ம்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடைபெறும்.
தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சுவாமி நான்கு மாடவீதிகளில் வாகன சேவைகள் நடைபெற உள்ளது. 4ம்தேதி மாலை 5.45 முதல் 6 மணிக்குள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. அன்றிரவு 9 மணிக்கு பெரியசேஷ வாகன உற்சவம் நடைபெறும். 5ம்தேதி காலை 8 மணிக்கு சின்ன சேஷ வாகன உற்சவம், இரவு 7 மணிக்கு அன்ன வாகன உற்சவம், 6ம்தேதி காலை 8 மணிக்கு சிம்ம வாகன உற்சவம், இரவு 7 மணிக்கு முத்துபந்தல் வாகன உற்சவம், 7ம்தேதி கற்பக விருட்ச வாகன உற்சவம், இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகன உற்சவம் நடைபெறும்.
8ம்தேதி காலை 8 மணிக்கு மோகினி அவதாரத்தில் சுவாமி மாடவீதிகளில் பவனி நடைபெறும். அன்று மாலை முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11.30 மணி வரை நடைபெறும். 9ம்தேதி கஜ வாகன உற்சவம், 10ம்தேதி சூரியபிரபை உற்சவம், இரவு சந்திரபிரபை வாகன உற்சவம், 11ம்தேதி குதிரை வாகன உற்சவம், 12ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்றிரவு 8.30 முதல் 10.30 மணி வரை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.