திருமலை: திருப்பதி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வரும் 1வது மலைப்பாதை 7வது மைல் அருகே மலைப்பாதையில் நேற்றிரவு 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. இந்த யானைகள் அங்கிருந்த மரக்கிளைகளை உடைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இதனைகண்டு அவ்வழியாக சென்ற பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தேவஸ்தான வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களின் சைரனை ஒலிக்கச்செய்தபடி விரட்டினர். சத்தம் கேட்ட யானைகள் பிளறியபடியே சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனையடுத்து வனத்துறையினர், அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி 4 அல்லது 5 பேராக ஒன்றாக செல்லும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், பக்தர்கள் தங்களது வாகனங்களில் தனியாக செல்வதை தவிர்த்து மற்ற வாகனங்களுடன் சேர்ந்து பாதுகாப்பாக செல்லும்படி அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஒற்றை தந்த யானை;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது நாயக்கனேரி மலைக்கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் புதூர், பனங்காட்டேரி, சீக்கஜுனை உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. ஜவ்வாதுமலைத்தொடரில் அமைந்துள்ள இந்த கிராம பகுதியில் நேற்று ஒற்றை தந்தம் கொண்ட யானை சுற்றித்திரிந்தது. ஆம்பூர்-பனங்காட்டேரி சாலையில் நேற்று விளைபொருட்களை பைக்கில் ஏற்றி வந்த விவசாயிகள், யானை சாலையில் நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், யானை நடமாட்டம் காணப்படுவதால் இந்த சாலையில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். இரவில் முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.