திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 54வது அறங்காவலர் குழுவின் தலைவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 54வது அறங்காவலர் குழுவின் தலைவராக பொல்லினேனி ராஜகோபால நாயுடு நேற்று காலை ஏழுமலையான் கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி அருகே தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து உறுப்பினர்களாக வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி, மடகாசிரா எம்.எல்.ஏ., ராஜு, ஜோதுலா நேரு, நர்சி ரெட்டி, தமிழகத்தில் இருந்து நியமிக்கப்பட்ட ராமமூர்த்தி ஆகியோர் பதவியேற்றனர்.
இதனையடுத்து ஏழுமலையானை வழிபட்டு பொறுப்புகளை ஏற்றனர். மீதமுள்ள உறுப்பினர்கள் அதனை தொடர்ந்து ஒவ்வொருவராக பதவி பிராமணம் செய்து கொண்டனர். பதவியேற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்து கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி தீர்த்த பிரசாதம் வழங்கினார். முன்னதாக பி.ஆர்.நாயுடு கோயில் சம்பிரதாயத்தின்படி பூ வராக சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் சென்று வழிப்பட்டார்.


