ஈரோடு: ஈரோட்டில் ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆவின் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்கனவே, திருப்பதிக்கு ஆவின் நெய் அனுப்பி வைத்ததை போல மீண்டும் அனுப்ப பரிசீலனை செய்யப்படும். ஆவின் பால் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை.
அதேநேரம், கள்ளச்சந்தையில் பால் விற்பனை செய்யப்படுவது முழுமையாக தடுக்கப்பட்டு உள்ளது.
பால் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஆவின் பொருள்கள் குறித்து, மக்களிடம் விளம்பரம் செய்ய வேண்டும். ஆவின், காதி போன்ற அரசு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமாகவும், விலை குறைவாகவும் உள்ளன. எனவே, பொதுமக்கள் அவற்றை அதிகமாக வாங்கி பயன்படுத்தினால் அந்த நிறுவனங்கள் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.