*கைது செய்து போலீசார் நடவடிக்கை
திருமலை : திருப்பதி வெங்கடகிரியில் உள்ள அரசு பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை பெற்றோர் சரமாரியாக அடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் ஆசிரியரை கைது செய்தனர். திருப்பதி மாவட்டம் வெங்கடகிரி பங்காருப்பேட்டை அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அதேபள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் லட்சுமிநாராயணா பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அந்த சிறுமி பெற்றோர்களுக்கு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் ஊர் மக்களுடன் இணைந்து நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பள்ளியில் இருந்த ஆசிரியர் லட்சுமிநாராயணாவை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இதனை அறிந்த மண்டல கல்வித் அலுவலர் வெங்கடேஸ்வரலு பள்ளிக்கு வந்து பார்வையிட்டு, பள்ளிக்கு அன்று ஒருநாள் விடுமுறை அளித்தார்.
மேலும் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். அதில் மாணவியிடம் லட்சுமிநாராயணா சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமிநாராயணாவை சஸ்பெண்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்கள் மீதும் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாகவும் கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் வகுப்பறையில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமிநாராயணாவை கைது செய்தனர்.