திருமலை: திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனையில் பெண் டாக்டர் தலைமுடியை பிடித்து இழுத்து நோயாளி தாக்கியதை கண்டித்து, மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் செயல்பட்டு வரும் வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (சுவிம்ஸ்) மருத்துவமனையில் நேற்று முன்தினம் பணியில் இருந்த பெண் டாக்டரை நோயாளி ஒருவர் திடீரென தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார். இதனால் மருத்துவருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டித்து அனைத்து டாக்டர்களும் தங்களது பணியை புறக்கணித்து அவசர சிகிச்சை பிரிவு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது டாக்டர்கள் கூறியதாவது:
சுவிம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் பெண் டாக்டரை, நீரழிவு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென ஓடி வந்து டாக்டரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அருகில் இருந்த மேஜையில் தள்ளி விட்டு தாக்கினார். இதில் மருத்துவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்த மருத்துவ பணியாளர்கள் உடனடியாக நோயாளியை பிடித்து டாக்டரை அவரிடம் இருந்து மீட்டனர்.
இச்சம்பவத்தால் பத்மாவதி மகளிர் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சுவிம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்து, பிரதான வாயிலுக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம். டாக்டர்கள், செவிலியர்கள் மீதான தாக்குதல்கள் வாடிக்கையாகிவிட்டன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் டாக்டரை அவமதித்ததாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
மனநிலை பாதித்தவர்கள், பிபி நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகளை கவனித்து சிகிச்சை அளித்து வரும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. நடவடிக்கை எடுக்காமல் புறக்கணித்தால், தாக்குதல்கள் தொடரும். இதை மனதில் கொண்டு தங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராம், கூடுதல் விஜிலென்ஸ் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அனைவரும் பணிக்கு சென்று சிகிச்சையை தொடர்ந்தனர். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் விசாரனை நடந்து வருகிறது.