ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதையாத்திரை செல்லும் பாதையில் கரடி உலாவரும் வீடியோ வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாதையாத்திரை வருவதற்காக அலிபிரி மற்றும் மோக்காலு மிட்டா ஆகிய இரண்டு மலைப்பாதைகள் உள்ளது. அதிகமாக அலிபிரி மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம். இரவு 10 மணி வரை திருப்பதி அடிவாரத்திலிருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அவ்வாறு செல்லக்கூடிய பக்தர்கள் திருமலைக்கு செல்வதற்கு இரண்டு முதல் மூன்று மணி வரை ஆகும். அவ்வாறு உள்ள நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் கரடி ஒன்று மலைப்பாதையில் உள்ள மான் பூங்கா அருகே வனப்பகுதியில் உலாவந்தது. இதனை அவ்வழியாக பாதையாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே இதே நடைபாதையில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று வனப்பகுதியிலிருந்து வந்து பாதையாத்திரையாக நடந்து சென்ற 4வயது சிறுவனை கவ்வி சென்றது. வனப்பகுதியில் இருந்த பக்தர்கள் அங்கிருந்த போலீசார் எழுப்பிய சத்தம் மற்றும் கற்களை வீசி தாக்கியதன் காரணமாக வனப்பகுதியிலேயே சிறுத்தை சிறுவனை விட்டு சென்றது.
இதனால் அந்த சிறுவன் பாதுகாப்பக மீட்கப்பட்டு நீண்ட சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இவ்வாறு உள்ள நிலையில் மலைப்பாதையில் மீண்டும் கரடி உலாவந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கரடி எந்த பகுதியிலிருந்து வந்தது அது மீண்டும் வருவதற்கான வாய்ப்புள்ளதா? என்பதை குறித்து தொடர்ந்து அந்த பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.