*உதவி இயக்குனர் தகவல்
திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் ரூ. 33 லட்சம் மதிப்பிலான செயற்கை கால் வழங்கப்படும் என உதவி இயக்குனர் தெரிவித்தார். திருப்பதி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட அதற்கான பணிகள் நடைபெற்றது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் பொருத்த ஆய்வு நடந்தது. முகாமை மாவட்ட உதவி இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘மாற்றுத்திறனாளிகளுக்காக தனியார் அறக்கட்டளை, மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை இணைந்து, பிறவி குறைபாடுகள், பல்வேறு விபத்துக்களால் கால்களை இழந்து நடக்க முடியாதவர்களுக்கு செயற்கைக் கால்கள் பொருத்த ஏற்பாடு செய்துள்ளன.
மேலும், பிற நோய்களால் பாதிக்கப்பட்ட 166 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ரூ. 33 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்கள் தயாரிக்கப்பட்டு 2 மாதங்களுக்குள் அவர்களுக்கு வழங்கப்படும்’ என கூறினார்.