திண்டுக்கல்: திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு இருந்ததாக வந்த புகாரின்பேரில், நெய் வழங்கிய திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தில் ஆந்திர அதிகாரிகள் 13 மணிநேரம் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.
திண்டுக்கல் அருகே பிள்ளையார்நத்தத்தில் உள்ள ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனம் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிப்பதற்காக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் அனுப்பப்பட்ட நெய்யில் மாட்டின் கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து நெய்யை குஜராத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வு மேற்கொண்டதில் மாட்டின் கொழுப்பு கலந்திருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து, திண்டுக்கல்லில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நிறுவனத்தில் இருந்து கழிவுநீரை ஆய்விற்காக எடுத்து சென்றனர். அதன்பின் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்து பால், தயிர், நெய், வெண்ணெய், பால் பவுடர் உள்பட பல்வேறு பொருட்களின் மாதிரிகளை எடுத்து சென்றார். மாதிரிகளை ஒன்றிய அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் கலப்படம் இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து அந்நிறுவனம் மீது ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் விநியோகம் செய்ததாக கூறி, திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் நேற்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், திருப்பதி டிஎஸ்பி சீத்தாராமராவ் தலைமையிலான போலீசார் 3 கார்களில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
நிறுவனத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை முதலில் ஆய்வு செய்தனர். பின்னர் பால், நெய் உள்பட பல்வேறு உணவுப்பொருட்களின் தரம் குறித்து சோதனை செய்து வருகின்றனர். மேலும் நிறுவனத்திற்கு பணியாளர்களை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். பகல் 1 மணிக்கு வந்த அதிகாரிகள் நள்ளிரவு 2 மணி வரை சுமார் 13 மணி நேரம் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.