திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இவர்களுக்கு முறையாக உணவு, குடிநீர், காபி, டீ, மோர் கிடைக்கிறதா? என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் நேற்று ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை நாட்களால் திருமலையில் கடந்த 4 நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. 4 முதல் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் வரிசை நீள்கிறது. பக்தர்களுக்கு விரைவில் சுவாமி தரிசனம் செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஐபி, சுபதம் நுழைவு தரிசனம், இலவச நேர ஒதுக்கீடு சர்வ தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டது.
வரும் 15ம்தேதி முதல் திருமலையில் 2வதாக நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அலிபிரியில் இருந்து திருமலை செல்லும் நடைபாதையில் வன விலங்குகளால் அச்சுறுத்தல் இல்லை என வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தால் மட்டுமே 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.4.27 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை நாளான நேற்று 80,551 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 32,028 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹4.27 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 22 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகே தரிசனம் செய்யும் நிலை உள்ளது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்தனர்.