திருப்பதி: திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியதன் காரணமாகவும், கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாகவும் ஏராளமானோர் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.
இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. மேலும் ஜனவரி 1ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்கள் மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்கள் விநியோகம் முடிந்துவிட்டது. இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய முடியாது. இதன் காரணமாக ஜனவரி 1ம் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம். இலவச தரிசன டோக்கன்கள் ஜனவரி 2ம் தேதி முதல் வழங்கப்படும். தொடர் விடுமுறையையொட்டி திருப்பதிக்கு வர ஆயத்தமாகும் பக்தர்கள், அதற்கு ஏற்ப தங்களின் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளும்படி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.