திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலை போல் காணிப்பாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி உள்பட மேலும் 10 கோயிலுக்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆதாரத்தை சமர்பித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் தலைமையிலான விசாரணைக் குழு, விசாரணை மேற்கொண்டு கலப்பட நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம், ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி, உத்தரபிரதேசத்ைத சேர்ந்த போலோ பாபா டெய்ரி நிறுவனத்தினரை கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய போலோ பாபா டெய்ரி நிறுவனத்தின் பொது மேலாளர் ஹரி மோகன் ரானாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் ஹரிமோகன் ராணா, திருப்பதி மற்றும் ஆந்திராவில் உள்ள பல பால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அதில், ஆந்திராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில், காணிப்பாக்கம் விநாயகர் கோயில், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி சிவன் கோயில், விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களுக்கு கலப்பட நெய் சப்ளை செய்துள்ளதாக கூறி, அதற்குண்டான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்குவது ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏற்கனவே நெய் சப்ளை செய்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், டிரைவர் உள்பட பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியின் உதவியாளர் அப்பண்ணாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஏ1 குற்றவாளி யார்? என்பது இதுவரை சிறப்பு விசாரணை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர்களான ஒய்.வி.சுப்பா ரெட்டி மற்றும் கருணாகர் ரெட்டி ஆகியோர் அறங்காவலர் குழு தலைவர்களாக இருந்தனர். மேலும் செயல் அதிகாரியாகவும் ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர் தர்மா ரெட்டி இருந்தார். தேவஸ்தானத்தின் பல முடிவுகள் இவர்கள் தன்னிச்சையாக எடுத்ததாக குற்றச்சாட்டுகளும் உள்ளது.
இவர்களது காலகட்டத்திலேயே இந்த கலப்பட நெய் பெறப்பட்டது. எனவே இவர்கள் மூவரில் யார் பெயர் இடம் பெறும் என்பது சிறப்பு விசாரணை குழு வழங்கும் அறிக்கை பொருத்து அமைய உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த விசாரணை நடைபெறுவதால், விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் அதிகாரிகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.