*சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீசார் எச்சரிக்கை
திருமலை : திருப்பதியில் தனியாக உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்து கூர்மையான ஆயுதங்களுடன் முகமூடி, டவுசர் அணிந்தபடி கொள்ளை கும்பல் சுற்றி வருவதாகவும், அவர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஒதுக்குப்புறங்களில் வீடுகள் உள்ளன.
இந்த இடங்கள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் குறைந்தளவில் உள்ள வீடுகளில் கடந்த சில வாரங்களாக டவுசர் மற்றும் முகமூடி அணிந்து திருட்டு கும்பல் சுற்றிவருவது அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதனை காவல்நிலையங்களில் உள்ள திரை மூலம் கண்டறிந்த போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் கொள்ளை கும்பலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை சார்பில் சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட்டு போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது: திருப்பதி மற்றும் சுற்றுப்புற பகுதிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொடூர கொள்ளை கும்பல் சுற்றி வருகிறது. எனவே, ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கொள்ளை கும்பல் இரவு நேரத்தில் காலிங்பெல் அடித்தும், வினோத சத்தம் எழுப்பியும், தண்ணீர் குழாய் திறந்து தண்ணீர் வெளியேறுவது போன்றும் செய்து உங்களை வீட்டிற்கு வெளியே வரவழைப்பார்கள்.
பின்னர் உங்களை தாக்கி கொன்றுவிட்டு கொள்ளையடிப்பார்கள் என்பதால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் எளிதில் பிடிபடாமல் இருக்க டவுசர் மற்றும் முகமூடி அணிந்து கூர்மையான ஆயுதங்களுடன் சுற்றி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியூர் செல்லும் பொதுமக்கள் எல்.எச்.எம்.எஸ் (லாக் மானிட்டரிங் சிஸ்டம் செயலி) மூலம் போலீசாரை ெதாடர்பு கொண்டு அழைத்தால், போலீசார் உங்கள் வீட்டில் கேமரா பொருத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
அதே நேரத்தில் இதுபோன்ற டவுசர் கொள்ளை கும்பல் குறித்து தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது டயல் எண் 100க்கு போன் செய்து தெரிவிக்கவும். இந்த கும்பல் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளை குறிவைத்து பகல் நேரத்தில் நோட்டம் விட்டு இரவில் கொள்ளையை அரங்கேற்றம் செய்வார்கள். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.