திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சண்டியூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஓணான் குட்டை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கர்நாடக மாநிலத்திற்கு கடந்த செப்டம்பர் 8ம் தேதி சொகுசு வேனில் ஆன்மீக சுற்றுலா சென்றனர். 2 நாட்கள் சுற்றுலா முடித்துவிட்டு திருப்பத்தூரை நோக்கி இன்று அதிகாலையில் வேனில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேனின் டயர் பஞ்சராகி பழுதானது.
இதனால் வேனில் வந்தவர்கள் கீழே இறங்கி நெடுஞ்சாலை தடுப்புச்சுவர் அருகே அமர்ந்திருந்தனர்.அப்போது பெங்களுருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பஞ்சராக நின்றிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியது பின்னர் சாலையோரம் அமர்ந்திருத்தவர்கள் மீதும் லாரி மோதியுள்ளது. அங்கே அமர்ந்து இருந்தவர்கள் சுதாரித்து எழுந்தரிக்கும் முன் கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டு உள்ளது. லாரியை கண்டதும் பெண்கள், ஆண்கள் சிலர் எழுந்து ஓட முயன்று உள்ளனர். இருப்பினும் ஏழு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயம் அடைந்து உயிருக்கு போராடிய 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.