ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி, ஜெய்பீம் நகர் பகுதி சேர்ந்தவர் ரூபன் (34). இவர் சொந்தமாக பசு வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள நாய், குட்டிகளை ஈன்றுள்ளது. சில தினங்கள் முன் இரை தேட சென்ற நாய், பின்னர் திரும்பவில்லை. இதனால் பசியால் தவித்த குட்டிநாய் அதேபகுதியில் சுற்றித்திரிந்து வந்தது.
ரூபனுக்கு சொந்தமான கொட்டகை பகுதிக்கு வந்த நாய்க்குட்டி, அங்கு படுத்திருந்த பசுவின் அருகே வந்து பால் குடிக்க தொடங்கியது. இதற்கு பசு, எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காததால் தொடர்ந்து நாய்க்குட்டி பால் குடித்துவிட்டு சென்றுள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.