நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. தென்னையில் நல்ல மகசூல் இருந்த வேளையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது. 1 கிலோ கொப்பாறை தேங்காய் ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனையானது. ஆனால் கடந்த சில வருடங்களாக குமரி மாவட்டத்தில் உள்ள தென்னைகளில் கேரள வாடல் நோய், மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரிப்பால், மாவட்டத்தில் பல ஹெக்டேர் பரப்பளவிலான தென்னைகள் காய்க்கும் திறனை இழந்தது. இதனால் தேங்காய் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொப்பறை தேங்காய் ரூ.240 முதல் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணை ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனையாகி வருகிறது.
விலை உயர்வால் தேங்காய், தேங்காய் எண்ணை பயன்படுத்தும் ெபாதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். இருப்பினும் தோட்டக்கலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென்னை சாகுபடி பரப்பளவை மேலும் அதிகரிக்கும் வகையில் மானியத்தில் தென்னை கன்றுகள் விநியோகம் செய்து வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்ய நெட்டை ரக தென்னை கன்றுகள் 70 வரை கொடுக்கின்றனர். நெட்டை குட்டை ரக தென்னை கன்றுகள் 40 வரை மானியத்தில் வழங்குகின்றனர். இதனை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி சாகுபடி பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் குமரி மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி பாதிப்பால் நெல்லை மாவட்டம் பணக்குடி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குமரி மாவட்டத்திற்கு இளநீர் விற்பனைக்கு வருகிறது.
வெயில் காலத்தில் சிவப்பு இளநீர் ரூ.50 வரைக்கும், பச்சை இளநீர் ரூ.40 முதல் ரூ.50 வரையும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக பலத்த வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. மழையின் காரணமாக இளநீர் விற்பனை மந்தம் அடைந்துள்ளது. இந்த நிலையில் பணக்குடியில் இருந்து வரும் இளநீரில் சிவப்பு இளநீர் ஒரு சில கடைகளில் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.35க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.