திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் புதிய வெள்ளித் தேர் செய்திட உபயதாரர்கள் வழங்கிய 200 கிலோ வெள்ளிக் கட்டிகள் சபாநாயகர் மு.அப்பாவு மற்றும் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பெற்று வழங்கினர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (01.06.2025) திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ரூ. 4.85 கோடி மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் வெள்ளித்தேருக்கு உபயதாரர்கள் வழங்கிய 200 கிலோ வெள்ளிக் கட்டிகளை பெற்று திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கினர்.
பின்னர் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளித் தேர் 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தினால் உருகுலைந்து போனது. அதனைத் தொடர்ந்து இத்திருக்கோயிலுக்கு 425 கிலோ வெள்ளியைக் கொண்டு புதிய வெள்ளித்தேர் உருவாக்கப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் பெறப்பட்ட 200 கிலோ வெள்ளியையும் சேர்த்து இதுவரை 350 கிலோ வெள்ளிக் கட்டிகள் உபயதாரர்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன. மீதம் தேவைப்படுகின்ற 75 கிலோ வெள்ளியையும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர்கள் தருவதாக தெரிவித்துள்ளனர். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய வெள்ளித் தேர் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த அர்ப்பணிக்கப்படும்.
இத்திருக்கோயிலின் மேல்தளத்தில் தட்டோடு பதிக்கப்படாததால் மழைநீர் ஒழுகுகின்ற நிலையும், திருக்கோயிலின் ஒரு மூலையில் தளம் சரிந்து விழுந்ததால் அந்த இடத்தை பக்தர்கள் பயன்படுத்தாத இயலாத நிலையும், கருமாரி உருமாரி தெப்பக்குளம் முழுவதுமாக சிதலமடைந்து இருந்த நிலையையும் அறிந்து இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும் இத்திருக்கோயிலில் 18 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த ஆயிரம் கால் மண்டபத்தின் கிழக்கு வாசல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் திறந்து வைக்கப்பட்டது.
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு ஆனித் திருவிழாவின்போது நடைபெறவுள்ள தேரோட்டத்தினை சிறப்பாக நடத்திட திருக்கோயில் மூலம் செய்யப்பட்டு வருகிற முன் ஏற்பாடு பணிகளையும் ஆய்வு செய்தோம். அதன்படி, ரூ. 58 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக சண்டிகேஸ்வரர் மரத்தேர் செய்யும் பணியும், ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் திருச்சி பெல் நிறுவனத்தின் மூலம் விநாயகர் தேர் மர சக்கரங்களை மாற்றி இரும்பு சக்கரம் பொருத்தும் பணியும், ரூ. 10.30 இலட்சம் மதிப்பீட்டில் விநாயகர் தேர் மற்றும் முருகர் தேர் சுத்தம் செய்து வார்னிஷ் அடிக்கும் பணிகளும், ரூ. 48 இலட்சம் மதிப்பீட்டில் 5 தேர்களுக்கும் மரக்குதிரைகள், யாழி, கந்தர்வர் செய்யும் பணிகளும், ரூ, 12 இலட்சம் செலவில் தேர்களுக்கான புதிய துணிகள் வாங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு தேரோட்டத்தின்போது வடம் இழுக்கின்ற கயிறு பழுதாகியதால் சிறு குழப்பங்கள் ஏற்பட்டன. அவற்றை சரிசெய்திடும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் ரூ. 7.50 இலட்சம் செலவில் புதியதாக வடக்கயிறு வாங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக தேரோட்டப் பணிகளுக்காக ரூ. 1.20 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஜீலை மாதம் 8ந்தேதி எந்தவித சிறு குறைபாடு இல்லாமல் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும்.
இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடது புறம் கிறிஸ்தவரும், வலது புறம் இஸ்லாமியரும் இருக்கின்றார்கள், நடுவிலே இந்துக்கள் இருக்கின்றனர். எம்மதமும் சம்மதமே என்ற வகையில் ஒருங்கிணைந்து அனைத்து மதத்தினரும் அவரவர் பிரார்த்தனை முழு சுதந்திரத்தோடு அமைதியான வழியில் நடைபெறுகிறது என்றால் மாண்புமிகு திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில்தான் இப்படிப்பட்ட அற்புதக் காட்சிகள் தமிழகத்தில் நிறைவேறிக் கொண்டிருக்கின்றது.
இந்த அரசு பொறுப்பேற்றபின் இதுவரை 2,974 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 3, 000-மாவது குடமுழுக்கு நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூர் அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயிலில் வரும் 05.06.2025 அன்று நடைபெற உள்ளது. இதுவரை திருக்கோயில்களுக்கு சொந்தமான 7,675 கோடி மதிப்பிலரின 7,561 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுளளன.2,01,526 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
திருக்கோயில்களுக்கு யானையை பெற வேண்டுமென்றால் இந்திய வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின்படி, அதன் முழு அனுமதியோடு தனிநபர்களால் வளர்க்கப்படுகின்ற யானையை அவர்கள் தருவதற்கு ஒப்புதல் கடிதம் கொடுத்தால் திருக்கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கிறது. அந்த யானையானது அந்த மாநில வனத்துறையின் அனுமதி பெற்று வாங்கப் பெற்றதா? அந்த யானையை வளர்க்க யாருக்கு அனுமதி தரப்பட்டிருக்கின்றது போன்ற அனைத்தும் முறையாக இருந்தால் மட்டுமே திருக்கோயில் வசம் யானை ஏற்றுக்கொள்ளப்படும்.
மாண்பமை உச்சநீதிமன்றம் தற்போது ஆகம விதிகளுக்குட்பட்ட திருக்கோயில்களை கண்டறிந்து மூன்று மாதத்திற்கு உள்ளாக அதற்குண்டான கமிட்டியை அமைத்து உடனடியாக அதன் அறிக்கையை அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஆகமம் அல்லாத திருக்கோயில்களில் எங்கெல்லாம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றதோ அங்கெல்லாம் உடனடியாக அர்ச்சகர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி பணியிடங்கள் நிரப்பப்படும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை முதலமைச்சர் அவர்கள் பெரியார் நெஞ்சிலே கைத்த முள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய சட்டம் தமிழக முதல்வர் ஆட்சி காலத்தில் தான் அது நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றைக்கு திருக்கோயிலில் கருவறைக்கு செல்ல முடியாதவர்களையும் கருவறைக்கு செல்ல வைத்த பெருமை நமது முதல்வர் அவர்களை சாரும்.
முருக பக்தர்களின் மீது கரிசனம் கொண்டு உண்மையாக முருகனை தொழுகின்றவர்கள் நடத்தினால் அந்த மாநாட்டுக்கு நிச்சயம் செல்வோம். இது சங்கிகளால் நடத்துகின்ற ஒரு மாநாடு. அதுவும் இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று நடத்துகின்ற ஒரு மாநாடு. நிச்சயமாக முருகன் மீது உண்மையான பக்தி கொண்டவர்கள் அந்த மாநாட்டிற்கு செல்ல மாட்டார்கள். இது வாக்கு வங்கிக்காக நடத்துகின்ற ஒரு மாநாடு ஆகவே உண்மையான முருகர் பக்தர்கள் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.