உடுமலை: திருமூர்த்தி அணை நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்துள்ள நிலையில், 2ம் மண்டல பாசனத்துக்கு வரும் 18ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.
இதுதவிர, பாலாறு மூலமும் தண்ணீர் வருகிறது. இந்நிலையில், காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்தது. குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2-ம் மண்டல பாசன காலம் நெருங்கிவிட்டதால் விரைவில் பணிகளை முடித்து அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சர்க்கார்பதியில் இருந்து காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று காலை நீர்மட்டம் 51 அடியை நெருங்கியது. 1021 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது.
குடிநீருக்காக 26 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த ஆண்டு இதேநாளில் அணையின் நீர்மட்டம் 18.77 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், பிஏபி பிரதான கால்வாயில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, 2-ம் மண்டல பாசனத்துக்கு வரும் 18ம் தேதி தண்ணீர் திறக்க கோரி அரசுக்கு நீர்வளத்துறை சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்துவிடும் என்பதால் 18ம் தேதி காலை தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 2ம் மண்டல பாசன பகுதியில் விவசாயிகள் ஆயுத்த பணிகளை துவங்கி உள்ளனர்.