சென்னை: சென்னை அருகே திருமுல்லைவாயிலில் சாலையில் மாடு சுற்றி திரிந்த விவகாரத்தில் அதன் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமுல்லைவாயில் சோழன் நகரில் வசிக்கும் கீதாவுக்கு சொந்தமான மாடு சாலையில் சுற்றி திரிந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பிரகாஷ் மாட்டை பிடித்து அரசுக்கு சொந்தமான பட்டியில் கட்டிவைத்துள்ளார். இதனை அறிந்த கீதா உட்பட உறவினர்கள் தொழுவத்திலிருந்த மாட்டை அத்துமீறி மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் கீதா உட்பட 3வரை போலீசார் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சென்னை மற்றும் புறநகரில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் கட்டிவைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கால்நடையின் உரிமையாளர் மீது கைது நடவடிக்கை பாயும் எனவும் அவர் எச்சரிக்கை செய்திருந்த நிலையில் திருமுல்லைவாயிலில் 3 பேரை போலீசார் கியது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.