திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி தலைவர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து புதிய தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் மகாதேவன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். திருமழிசை பேரூராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1, 6, 7, 13, 14, 15 என 6 வார்டுகளை அதிமுகவும் 3, 4, 5, 8, 10, 12 ஆகிய 6 வார்டுகளை திமுகவும் கைப்பற்றின. 2வது வார்டை மதிமுகவும், 9 வது வார்டை பா.ம.க.,வும், 11வது வார்டை சுயேட்சையும் கைப்பற்றினர்.
இதில், திமுக கூட்டணி 7 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும் அதிமுக கூட்டணியிலிருந்து தனித்து போட்டியிட்ட பாமக ஒரு வார்டையும், சுயேச்சையாக 11 வது வார்டில் போட்டியிட்டவர் வெற்றி பெற்று பாஜ வில் இணைந்தார். இதில், பேரூராட்சியில் நடந்த மறைமுக தேர்தலில், திமுகவைச் சேர்ந்த உ.வடிவேல் தலைவராகவும், மகாதேவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 12ம் தேதி பேரூராட்சித் தலைவர் உ.வடிவேல் விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மே 16ம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து, துணை தலைவர் ஜெ.மகாதேவன் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தலைவர் பதவிக்கு ஆகஸ்டு 6ம் தேதி (நேற்று) தேர்தல் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது. தலைவர் பதவிக்கு திமுக, அதிமுகவினரிடையே கடும் போட்டி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக தேர்தலை புறக்கணித்ததால் திமுக சார்பில் துணைத் தலைவர் ஜெ.மகாதேவன் மட்டுமே போட்டியிட்டார். இதனால் தலைவராக ஜெ.மகாதேவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்த தேர்தல் நடத்தும் அலுவலர் ம.வெங்கடேஷ், அதற்கான சான்றிதழை மகாதேவனிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து திருமழிசை பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாதேவனுக்கு திமுக மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர், ஆதி திராவிட நலக்குழு மாநிலச் செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாவட்ட நிர்வாகிகள் ராஜி, ஜெயபாலன், நரேஷ்குமார், பேரூர், ஒன்றிய, நகர செயலாளர்கள் செயலாளர் முனுசாமி, கமலேஷ், தேசிங்கு, சன் பிரகாஷ், திருமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், முத்தமிழ்செல்வன், குமார், விமல்வர்ஷன், காஞ்சனா சுதாகர், சிட்டிபாபு, துணைத் தலைவர் ஸ்ரீதர், அண்ணாமலை, ஜனார்த்தனன், வெள்ளவேடு கோபிநாத் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.